சென்னை: தமிழகம் முழுவதும் இன்றுமுதல் (10ந்தேதி) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நேற்று (மே 9) மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.428.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய சேவைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என்றும், ஆனால், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு காரணமாக 8ந்தேதி (நேற்று முன்தினமும், நேற்றும் (9ந்தேதி) அனைத்து கடைகளும், நிறுவனங்களும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகளும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால், கடந்த இரு நாட்களாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதியது. நேற்றை தினம் பல கடைகளில் ஏராளமானோர் மதுபானங்களை வாங்கிக்குவித்தனர். 15 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை பெட்டி பெட்டியாக வாங்கிச் சென்றனர். இதனால், நேற்று ஒரே நாளில் மட்டும், ரூ.428.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.