சென்னை: மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முன்பு மின்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீது லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவ அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு புகார் கொடுத்த நிலையில், தற்போது அதிமுக தரப்பில் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக சார்பில் லஞ்சஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான புகாரில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மின்துறையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 45,800 மின்மாற்றிகள் வாங்குவதற்கு ரூ.1,182 கோடி மதிப்பில் டெண்டர்கள் விடுக்கப்பட்டன. இதன் மூலம், ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில் டெண்டர் விதிகளுக்கு எதிராக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது தெரிந்தது. இந்த முறைகேட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ப்பு இருப்பதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ளதா அறப்போர் இயக்கம் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 6ந்தேதி அன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி தெரிவித்தது. அப்போது, “செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய டிஸ்ட்ரிபியூஷன் ட்ரான்ஸ்பார்மர் கொள்முதலில் ரூ.397 கோடி மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

இந்த ஊழல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூலம் எப்படி நடந்தது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்தபடி டெண்டர் அதிகாரி காசி இந்த முறைகேட்டுக்குத் துணை போனதற்கும் அறப்போர் இயக்கம் சார்பில் ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்டுள்ளன.

500 கிலோவாட் திறன் கொண்ட 800 டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறை கேடு நடந்தது பற்றி அறப்போர் இயக்கம் விவரிக்கிறது. 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஒப்பந்தம் திறக்கப்படும்போது, 26 ஒப்பந்ததாரர்களும் டிரான்ஸ்பார் மருக்கு ஒரே விலையைக் குறிப்பிட்டு ஒப்பந்தபுள்ளியை சமர்ப்பித்துள்ளார்கள்.

டெண்டர் ஆய்வுக்குழு இவற்றை ரத்து செய்வதற்குப் பதில் விலையை ரூ.12,49,800 ரூபாயாகக் குறைத்து 16 ஒப்பந்ததாரர்களுக்கு தலா 50 ட்ரான்ஸ்பார்மர்கள் வீதம் சமமாகப் பிரிந்து ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்போது ஒரு டிரான்ஸ்பார் மரின் டெண்டர் தொகை சராசரியாக 7,89,750 ரூபாய் விலையில்தான் இருந்ததுள்ளது. அதன்படி டெண்டரின் மொத்த மதிப்பு 63 கோடி ரூபாய்தான்.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தானில் போடப்பட்ட 500 கிலோவாட் டிரான்ஸ் பார்மர்களுக்கான ஒப்பந்தமானது 7,87,311 ரூபாய்க்குப் போடப்பட்டுள்ளது. இப்போதும் கூட ரூ.8,91,000 இந்த டிரான்ஸ்பார்மர் கிடைக்கிறது. தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் வெளியிட்ட 2021-22ஆம் ஆண்டுக்கான விலைப்பட்டியலிரலும் இதன் விலை ரூ.7,89,750 ரூபாய் என்றுதான் குறிப்பிட்டுள்ளது.

ஒரே விலையில் டெண்டர்கள்:

ஒரே விலையில் ஒப்பந்தப் புள்ளி குறிப்பிட்டப்பட்ட டெண்டர்களை ரத்து செய்யாமல் மின்சார வாரிய நிர்வாகத்தின் தலைமை அதிகாரியான ராஜேஷ் லகானி ஐஏஎஸ், அனைத்து டெண்டர்களுக்கும் ஒப்புதலும் வாங்கி இருக்கிறார் என்று அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டுகிறது.

இந்த மெகா டிரான்ஸ்பார்மர் ஊழல் தொடர்பாக டெண்டர் அதிகாரி காசி, டெண்டர் ஆய்வு குழு அதிகாரிகள், ஒரே விலையில் டெண்டர் கொடுத்த நிறுவனங்கள், ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.