டில்லி,

மிழகத்தில் நடைபெற்ற பான் மசாலா, குட்கா ஊழல் குறித்து, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து,  குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்தது தொடர்பாக தமிழக அரசிடம்  மத்திய அரசு  அறிக்கை கேட்கவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய தமிழக அமைச்சர்மீது அதிரடி  நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்காவை தமிழகத்தில்  திருட்டுத்தனமாக விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இதுகுறித்து இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் விசாரணை நடத்த வலியுறுத்தினார். ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

இதற்கிடையில், இந்த ரூ.40 கோடி ஊழல் விவகாரத்தை  மத்திய அரசு  கையில் எடுத்துள்ளது.

இந்த லஞ்ச ஊழல் குறித்து,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா,  துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த புகார் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வருமானவரித்துறையால் சோதனைக்குள்ளாக்கப்பட்ட  அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மேலும்  அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக அவர் பதவி நீக்கப்படலாம் என்றும், மத்திய அரசால் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதை மத்திய அரசு தள்ளி வைத்திருப்பதாகவும் டில்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக தமிழக அரசு நித்திய கண்டம் பூரண ஆயுசு போன்ற நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.