டெல்லி:
வழக்கறிஞரை விசாரணை குழு ஆணையராக நியமிக்க ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ரூ.94 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.
டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டில் மூத்த பெண் நீதிபதியாக இருப்பவர் ரச்னா திவாரி லகான்பால்.
ஒரு சில முக்கியமான பிரச்சினைகளில், காவல்துறையினர் விசாரணையை மட்டும் நம்பாமல் விசாரணை குழு அமைத்து விசாரிப்பது அரசு மற்றும் கோர்ட்டுகளில் உள்ள நடைமுறை.
அதுபோல, வழக்கு ஒன்றிற்கு விசாரணைக்குழு ஆணையராக வக்கீல் ஒருவரை நியமனம் செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார் பெண் நீதிபதி ரச்னா திவாரி. இதில் முதல் கட்டமாக ரூ.4 லட்சம் உடனே தர வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இதுகுறித்து, அந்த வழக்கறிஞர் விஷால் மெகன், சிபிஐ-க்கு தகவல் கொடுத்து, அவர்களின் ஆலோசனையின் பேரில் முதல்கட்ட லஞ்ச பணத்தை பெண் நீதிபதி ரச்னா திவாரியிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் நீதிபதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவருடன் அவரது கணவர் அலோக் லோகன்பாலும் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரது வீட்டை சோதனையிட்டதில் 94 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றியதாகவும் சிபிஐ தெரிவித்து உள்ளது.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.