சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 3 பேரில் சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு சென்ற ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கியது. பணத்தை ரெயிலில் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் அந்த பணம், பாஜக எம்எல்ஏவும், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு உரியது என்பது விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், அந்த பணம் தனக்கு உரியது அல்ல என்று நயினார் நாகேந்திரன் மறுத்து வந்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு, தாம்பரம் போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. வழக்கு ஆவணங்கள் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் 3 பேரும் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. அதன்படி, சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3பேரும் ஏப்ரல் 30ந்தேதி அன்று விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 9 மணி நேரமாக விசாரண நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் நயினார் நாகேந்திரன் பேசிய செல்போன் உரையாடல்களை கைப்பற்றி இருப்பதால் அது தொடர்பாகவும் மீண்டும் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும், அவர்களிடம் பணத்தை கொடுத்தது யார்? , அந்த பணத்தை நெல்லையில் யாரிடம் பணத்தை கொடுக்க சென்றனர் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்ற நிலையில், மேலும் விசாரணை நடத்த உள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக, நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.