சென்னை: நாடாளுமன்ற தேர்தலின்போது, ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) காலை ஆஜரான நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேரும் கடந்த ஜூன் 31 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து, ஜூலை 11ந்தேதி பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் ஏராளமான கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டனர். எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீசார் 190 கேள்விகளை எழுப்பியதாகவும், இந்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடமும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடமும் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலும் கேள்விகளை எழுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இநத் விசாரணை சுமார் 8மணி நேரம் வரை நடைபெற்றது.
இதையடுத்து, நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. அதன்படி, இன்று விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராகி உள்ளார். அவரிடம் நடத்தப்படும் இன்றைய விசாரணையின் அடிப்படையில்தான், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக, அரசியல் கட்சியினர் பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் சோதனை நடத்தியபோது கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தைக் கொண்டு சென்றதாக பாஜக நெல்லை வேட்பாளரும் எம்எல்ஏ-வுமான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், ஸ்ரீவைகுண்டம் பெருமாள் ஆகியோரை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது விசாரணையில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தார். அதை ஏற்க மறுத்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை கொண்டனர். இதையடுத்து தற்போது மீண்டும் அவர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்-