சென்னை: தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 50% விடுவிப்பு செயது தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  ரூ.352 கோடி விடுவிக்கப் பட்டு உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2021-22ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.705 கோடி  நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலை யில், அதில் 50 சதவகிதமான  ரூ.352.5 கோடி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடியை தமிழக அரசு வழங்குகிறது.

இது தொடர்பாக  தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  “கடந்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை (MLACDS) செயல்படுத்த விரிவான வழிகாட்டுதல்களுடன் ஆண்டுக்கு ஒரு தொகுதிக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் சட்டமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.2.50 கோடியிலிருந்து ரூ.3.00 கோடியாக உயர்த்தி ஆணைகள் வெளியிடப்பட்டன.

அதன்பின்னர், 2020-21 ஆம் ஆண்டில் எம்எல்ஏக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை ரூ.2 கோடியாகக் குறைத்து,ரூ.235 கோடி (ரூ. 1 கோடி) ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் வரைவு வழிகாட்டுதல்களுடன் தேவையான முன்மொழிவை அனுப்பி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை நிதி 2021-22 ஆம் ஆண்டில் ஒரு தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ. 3 கோடி மற்றும் பட்ஜெட் மதிப்பீட்டின் ரூ.702 கோடியில் 50% நிதியை விடுவிக்க தேவையான அரசாணைகளை வெளியிடுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில்,2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.705 கோடி (ரூபா எழுநூற்று ஐந்து கோடி மட்டுமே) நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் ரூ.352.5 கோடி (50% மட்டும்) விடுவித்து உள்ளது.