சென்னை: தமிழ்நாட்டில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அனைவருக்கும் என்ற கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்படி, வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுத்து வருகிறது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் கனவு இல்லம் திட்டம் செயலாற்றி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டின் குறைந்தபட்ச அடித்தளப் பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்கும், அதில் 300 சதுர அடி RCC கூரையால் மூடப்பட்டிருக்கும், மீதமுள்ள 60 சதுர அடி RCC அல்லது பயனாளியின் விருப்பப்படி எரியாத பொருட்களால் செய்யப்பட்ட வேறு எந்த வகையான கூரையாகவும் இருக்கலாம்.
இதைத் தொடர்ந்து, கடந்த தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், 2030 ம் ஆண்டிற்குள் ‘குடிசைகள் இல்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு ஒரு லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டி தரப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் மீது உரையாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.
அதன்படி, இந்த திட்டத்தினை விரைந்து செயல்படுத்தும் பொருட்டு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.3.50 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.