சென்னை,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட இருக்கும் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் இணை பேராசிரியர் பணிகள்  ரூ.35 லட்சம், 45 லட்சம் என்று ஏலம் போவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

உதவி பேராசிரியர் பணிக்கு ரூ.35 லட்சமும், இணை பேராசிர்யர் பணிகுக்கு ரூ.45 லட்சமும் வசூல் நடைபெறுவதாக பாமக தலைவர் ராமதாஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்புக்கான விரிவாக்கப்பட்ட மையம் தரும புரியில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மொத்தம் 8 பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பும், 6 பிரிவுகளில் முனைவர் பட்ட ஆய்வும் பயிற்று விக்கப்படுகின்றன.

இவற்றில் உயிரி தொழில்நுட்பம், நிலவியல் ஆகிய துறைகள் அண்மையில் தான் தொடங்கப் பட்டன  என்பதால் அவற்றுக்கு தலா 4 உதவிப் பேராசிரியர்கள், ஓர் இணைப்பேராசியர் என மொத்தம் 10 ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஜுலை மாதம் 27-ந்தேதி வெளியிடப்பட்டது.

அடுத்த இரு வாரங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், அதன்பின் தொடர் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிகளுக்காக விண்ணப்பித்த பலரும் பல்கலைக்கழக நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, பொறுப்பான பதில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அந்த பணிகளுக்கு வரும் 24-ந் தேதி நேர்காணல் நடைபெறும் என அறிவித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

24-ந் தேதி நேர்காணல் முடிந்தவுடன் 25-ந் தேதி ஆட்சிக்குழு கூட்டத்தில் புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, அன்று மாலையே பணி நியமன ஆணைகளை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேரம் நடத்தி யாருக்கு பணி வழங்குவது என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும், வரும் 24-ந் தேதி பெயரளவில் நேர்காணல் நடத்தி உதவிப் பேராசியர் பணிக்கு தலா ரூ.35 லட்சம் வீதமும், இணைப்பேராசிரியர் பணிக்கு ரூ.45 லட்சம் வீதமும் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்பட்டு வரும் விதிகள் மற்றும் மரபுகளின் படி ஆள்தேர்வுக்காக அறிவிக்கை வெளியிடப்பட்ட 6 மாதங்களில் அது குறித்த அனைத்து நடை முறைகளும் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒருவேளை அவ்வாறு முடிக்கவில்லை என்றால் புதியதாக ஓர் அறிவிக்கை வெளியிட்டு, அதனடிப்படையில் புதிய நியமனங்களைத் தான் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், ஆசிரியர்கள் தேர்வுக்காக அறிவிக்கை வெளியிட்டு 10 மாதங்கள் உறங்கிக் கொண்டிருந்த பெரியார் பல்கலைக்கழகம், இப்போது திடீரென ஒரு நாளில் நேர்காணல் நடத்தி, அடுத்த நாளே நியமன ஆணை வழங்கத் துடிப்பது ஏன்? பல்கலைக்கழக பணிகளுக்கான விண்ணப்பங்களை இரு வாரங்களில் அனுப்ப வேண்டும் என்று அவசரம் காட்டும் பல்கலைக் கழகம் நேர்காணலை நடத்துவதில் மட்டும் 10 மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்தது ஏன்? அனைத்துக்கும் காரணம் ஊழல்…. ஊழல் மட்டுமே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.