சென்னை:
கொரோனா பரவல் காரணமாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்படாத நிலையில், சென்னை மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
நேற்று (18/06/2020) ஒரே நாளில் ரூ.33 கோடி அளவிலான மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந் துள்ளதால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை 12 நாள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இதையடுத்து, குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் உள்ள மதுபானக்கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. சென்னை புறநகர் பகுதிகளை சுற்றி இருக்கும் பிற மாவட்ட டாஸ்மாக் கடைகளில் வழக்கத்துக்கு மாறாக மது விற்பனை அமோகமாக இருந்தது. பெரிய பைகளுடன் வந்த சென்னை குடிமகன்கள் டஜன்கணக்கில் மதுபானங்களை அள்ளிக்கொண்டு வந்தனர்.
இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ரூ.33 கோடி அளவிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
சென்னை மாவட்ட பார்டர் பகுதிகளான திருவள்ளூர் மேற்கு – 12 கோடி ரூபாயும், காஞ்சிபுரம் வடக்கு – 5 கோடி ரூபாயும், காஞ்சிபுரம் தெற்கு – 16 கோடியும் வசூலாகி உள்ளது.