டில்லி:
ஊழியர்களிடம் டி.டி.எஸ்., வரியை பிடித்தம் செய்து, வருமான வரித்துறையிடம் செலுத்தாமல், 447 நிறுவனங்கள் ரூ.3,200 கோடிக்கு மோசடி செய்துள்ளது அம்பலமாகிறது.
தனியார் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களிடம் டி.டி.எஸ்., வரியை, சம்பளம் அல்லது இதர பண சலுகைகள் அளிக்கும் போது பிடித்தம் செய்து வருமான வரித்துறையிடம் செலுத்தும்.
இதை கண்காணிக்க, வருமான வரித்துறையில் டி.டி.எஸ்., பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவு அண்மையில் நடத்திய ஆய்வில், 447 நிறுவனங்கள் ரூ.3,200 கோடியை செலுத்தாமல் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறைகடுக்கு மூன்று மாதங்களில் இருந்து ஏழு வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். அபராதமும் விதிக்கப்படும்.
மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களில் பல, கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருப்பவை. இதில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ரூ.100 கோடியை செலுத்தாமல், வேறு வழியில் பயன்படுத்தியுள்ளது.
திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்களும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளன. துறைமுக மேம்பாட்டு பணியில் ஈடுபட்டுள்ள ஒரு உள்கட்டமைப்பு நிறுவனம் ரூ.14 கோடியும், பன்னாட்டு நிறுவனம் ஒன்று ரூ.11 கோடியும் இப்படி மோசடி செய்துள்ளன.
இந்த மோசடி, கடந்த வருடம் ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில் நடந்தவை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வரி பணத்தை வசூலிக்கும் பணியிலும், அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியிலும் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது.