சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வுக்கு ரூ. 3028 கோடி வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன், ஓய்வூதியம் முறையாக வழங்கப்படுவது இல்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்கு உள்ளன. இதற்கிடையில் பணி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வு வழங்க நீதிமன்றம், உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு வழங்க தேவையான தொகை குறித்து கணக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, நடப்பாண்டு அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3,028.75 கோடி தேவைப்படுகிறது. மேலும், மாதந்தோறும் அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டுமானால் கூடுதலாக ரூ.73.42 கோடி தேவைப்படுகிறது. இதனை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்கத்தினர், அரசியல் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தாலேயே போக்குவரத்து துறை பெரும் நஷ்டங்களை சந்தித்து வருவதாகவும், இதனால் ஒய்வு பெறும் பணியாளர்களுக்கு முறையான பணப்பலன் கிடைப்பது இல்லை என குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிமன்றத்தால் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இதனால், தமிழ்நாடு அரசு, எனவே, குறைவாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் அகவிலைப்படி உயர்வு வழங்க முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை. ஓய்வு பெறுவோர் வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுவதாக தொழிற்சங்ககத்தினர் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பணப்பலன் வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கத்தினர் தரப்பில் அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை நிதி அலுவலர் அளித்த பதிலில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதியத்தின் மூலம் ஆணை பெறப்பட்டவுடன், 2023-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.