திருச்சூர்

கேரளாவில் பாஜக தேர்தல் பணம் ரூ.3.5 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சுமார் 2 மாதங்களுக்கு முன்பு பாஜக தேர்தல் செலவுக்காகக் கர்நாடகாவில் இருந்து கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் ரூ.3.5 கோடி கொள்ளை அடிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.  இதை பாஜகவினரே திட்டமிட்டு கொள்ளை அடித்ததாக வெளியான தகவல் பரபரப்பை உண்டாக்கியது.  மேலும் இது கருப்பு பணம் என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது.

காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த கொள்ளை தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட தலைவர்களிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.    இந்த விசாரணை வளையத்தில் பிரபல நடிகர் சுரேஷ் கோபியும் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் நடந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்பில் போட்டியிட்டார்.  இந்த கொள்ளை குறித்த சந்தேகத்தில் உள்ள பாஜகவினரான தர்ம ராஜன் உள்ளிட்டோர் கொள்ளை நிகழ்வுக்குப் பிறகு சுரேஷ் கோபியின் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து சென்றதால் இந்த விசாரணை நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.