சென்னை: தமிழக நீர்பாசனத் திட்டங்களுக்காக நபார்டு வங்கி ரூ.2978 கோடி கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 89 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நபார்டு வங்கியின் தலைவர் டாக்டர். ஜி.ஆர். சிந்தாலா சந்தித்து பேசினார். அப்போது, காவிரி டெல்டா பகுதியில் பல்வேறு வகையான நீர்பாசனத் திட்டங்களுக்கான விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்காக நபார்டு வங்கியின் ரூ.2978 கோடி கடனுதவி வழங்குவது தொடர்பான அனுமதிக் கடிதத்தை வழங்கினார். இந்த சந்திப்பின்போது விவசாய மற்றும் ஊரக மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா பாராட்டு தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளின் நலனுக்காக தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி முதலமைச்சரை கேட்டுக்கொண்டதுடன், அவற்றுக்கு நபார்டு நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். விவசாய நிலங்களில் சூரியத் தகடுகள் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்து, விவசாயிகள் வருவாயைப் பெருக்கலாம் என்றும், இணையசேவைகள் மூலமாக விவசாயத் துறையில் முன்னேற்றம் கொண்டு வரலாம் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திககுறிப்பில், தமிழக நீர்பாசனத் திட்டங்களுக்காக நபார்டு வங்கி ரூ.2978 கோடி கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 89 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல் அளித்து கடனுதவி வழங்கும் நபார்டின் துரிதமான பணியைப் பாராட்டிய முதலமைச்சர், கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரித்தல், கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த மீன்வள வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசின் ஆலோசகர் கே.சண்முகம், கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், நபார்டு தலைமை பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர் என கூறப்பட்டுள்ளது.