சென்னை:

தமிழகத்தில் இதுவரை  ரூ.283 கோடி மதிப்புள்ள தங்கம், 124 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும்,  வருமான வரி சோதனை தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு  செய்யபட்டிருப்பதாக வும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறி உள்ளார்.

இன்று  செய்தியாளர்களிடம் பேசிய  தேர்தல் ஆணையர், உரிய ஆவணங்கள் இல்லாததால்  தமிழகத்தில் இதுவரை 124 கோடியே 63 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது  என்றும், நேற்று மட்டும் இரண்டு கோடியே 33 லட்சம்  பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதுபோல,  283 கோடி ரூபாய் மதிப்பிலான 989.6 கிலோ தங்கம் மற்றும் 492.3 கிலோ வெள்ளியும் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தவர்,   தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், 1950 என்ற எண்ணில் நிறைய புகார்கள் வருகிறது. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.

வருமான வரி சோதனை நடைபெற்றது தொடர்பாக காவல்துறையில் எப்ஐஆர் போடப்பட்டிருப்ப தாகவும் தெரிவித்தவர், காட்பாடி ரெய்டு தொடர்பாகவும் எப்ஐஆர்  பதியப்பட்டு உள்ளது என்பதை தெளிவு படுத்தினார். இதுகுறித்த அறிக்கைகளும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பபடும். தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு செய்யும் என்றார்.

வாக்காளர் அடையாளஅட்டை மட்டுமின்றி 13ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம் என்றும், 1 லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் தேர்தலை கண்காணிக்கும் வரையில் 7280 மைக்ரோ அப்சர்வர்கள் (நுண் பார்வையாளர்கள்) நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறியவர், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையிலான நாட்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று கூறினார்.

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள  சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு மே 19 ம் தேதி இடைத் தேர்தல்  நடைபெற இருப்பதால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.