சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 25000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில்  அமைச்சர் பெரியகருப்பன் பதில். கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய  கோவை சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் ‘பெண்களின் வருமானம் முழுக்க முழுக்க குடும்பத்திற் காக மட்டுமே செலவு செய்யப்படுகிறது. ஆண்களின் வருமானம் கூட பீடி, சிகரெட், டாஸ்மாக் போன்ற செலவுக்கு செல்கிறது என்று கூறினார்.

இதைக்கேட்டதும் அவையில் இருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், தான் அனைவரையும் சொல்லவில்லை ஒரு சிலரை தான் சொன்னேன். நீங்கள் எல்லோரும் ஏன் கொந்தளிக்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து குறுக்கிட்டு பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு , ‘தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கி பெண்கள் தலைநிமிர்ந்து வாழ மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் பல்வேறு சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது என்பதை நினைவுகூர்ந்தார்.

இதனை தொடர்ந்து  மீண்டும்  பேசிய வானதி சீனிவாசன், “ஆன்லைன் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை இணையவழி மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன்,  மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கக் கூடிய பொருள்களை ஆன்லைன் மூலம் பொது மக்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார் .

இதற்கு பதில் அளித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், “தமிழக அரசு பதவியேற்று 10 மாதங்கள் தான் ஆகி உள்ளது கடந்த 10 ஆண்டுகளாக மகளிர் சுய உதவி குழுக்கள் வளர்ச்சியில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் 21 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஆண்டில் 25 ஆயிரம் கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்க கூடிய பொருட்களை, அரசு அலுவலகங்கள் ஆன்லைன் மூலம் பெறக்கூடிய வகையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.