பெங்களூரு
உக்ரைன் போரில் உயிரிழ்நத மாணவர் நவீன் குடும்பத்துக்குக் கர்நாடக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கி உள்ளது.
ரஷ்யப்படைகள் உக்ரைனில் தொடர்ந்து கடந்த சில தினங்களாகப் போர் நடந்து வருகிறது. உக்ரைனில் இருந்து 14.5 லட்சம் பேர் இதுவரை வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்த போரினால் உக்ரைனில் இந்தியா உட்பட பல்வேறு நாட்டு மக்கள் மற்றும் மாணவர்கள் சிக்கியுள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் கார்கிவ் பகுதியில் கடந்த 1ம் தேதி நடந்துகொண்டிருந்த போரின்போது கர்நாடகாவைச் சேர்ந்த 21வயது இளைஞர் நவீன் என்பவர் கொல்லப்பட்டார். இந்தியாவில் இந்த சம்பவம் இந்தியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நவீன மரணத்துக்குப் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.
நேற்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நவீன் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை நவீன் குடும்பத்திற்கு கர்நாடக அரசின் நஷ்ட ஈடாகக் கொடுத்தார்.
இது குறித்து அவர்,” நவீன் குடும்பத்தினரிடம் ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை ஒப்படைத்தேன். நவீனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும். விரைவில் நவீன் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதுற்காகஉக்ரைனில் இருக்கும் இந்தியத் தூதரகத்துடன் எப்போதும் இணைப்பில் இருப்போம்” என்று பேசினார்.