சென்னை: மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்து சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 25.66 கோடி வங்கிக் கடன் இணைப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
சென்னை ராணிமேரிக்கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 25.66 கோடி வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், இளைஞர்களின் திறனை மேம்படுத்து வதற்காக திறன் பயிற்சியளிக்கும் அரசுத் துறைகளையும், தனியார் துறைகளையும் ஒருங்கிணைத்து, 388 வட்டாரங்களில் ‘இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படும் என்றும், இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு, திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களையும் ஒருங்கே பெறுவதற்கு, இந்தத் திறன் திருவிழாக்கள் பேருதவியாக அமையும். இதற்காக 1.94 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, நம் மாநிலத்தில் உள்ள இளையோருக்கும் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்கும் வகையில் இந்த இளைஞர் திறன் திருவிழாவில், இளையோருக்கு திறன் குறித்த ஆலோசனைகளை வழங்க கலந்தாய்வுக் கூடங்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இளைஞர் திறன் திருவிழாவில் பங்கு கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களின் சுயவிபரங்களைப் பதிவு செய்து கொள்ள நிகழ்விடத் திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு மின்னணுவியல், தொலைத் தொடர்பு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள், ஆயத்த ஆடை வடிவமைப்பு, வங்கி, நிதிசேவை மற்றும் காப்பீடு, கைவினைப் பொருட்கள் மற்றும் தரைவிரிப்பு, நகைகள் வடிவமைத்தல், உணவு பதப்படுத்துதல் போன்ற பல்வேறு தொழில் துறைகளில் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், பயிற்சி பிரிவுகள், வேலைவாய்ப்புகள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போன்ற தகவல்களை தொழில் துறை வல்லுநர்கள் விரிவாக விளக்குவார்கள்.
முதலமைச்சர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் விற்பனை அரங்குகளைத் திறந்து வைத்து பார்வையிட்டதுடன், இளைஞர் திறன் திருவிழா கலந்தாய்வுக் கூடங்களையும் பார்வையிட்டு, இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி சான்றிதழ், தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
மேலும், 608 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, காய்கறி, பழ வியாபாரம், மளிகைக்கடை, சிறு பெட்டிக்கடை, தையல் நிலையம் போன்ற தொழில்கள் நடத்துவதற்கு 25.66 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். விழா நடைபெறும் இராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை கண்காட்சியானது 25.05.2022 முதல் 29.05.2022 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.