நாசிக்:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சாதனா டவுன் பஜாரில் எஸ்பிஐ ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். செயல்படவில்லை என்று இதனை நிர்வகித்து வரும் நிறுவனத்துக்கு குறுந்தகவல் வந்தது.

உடனடியாக அந்நிறுவன ஊழியர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அங்கு ஏ.டி.எம். உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணமும் கொள்ளை போய் இருந்தது. இது குறித்து எஸ்பிஐ மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

விசாரணையில், மர்ம ஆசாமிகள் காஸ் கட்டரை பயன்படுத்தி, ஏ.டி.எம்.ல் ஓட்டை போட்டு அதில் இருந்த ரூ.23 லட்சத்து 12 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மர்ம ஆசாமிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.