சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக 3வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
3வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அடித்தட்டு மக்களுக்குக் கூடுதல் நிவாரணத்தைத் தமிழக அரசு அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.
வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், ரேசன் கார்டுதாரர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.2,000/- உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், பேரிழப்பைச் சந்தித்திருக்கும் சிறு,குறு தொழில்களுக்கான உதவித்தொகுப்பையும் மத்திய,மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பணியாளர்களின் ஊதியத்தில் தொடங்கி மீண்டும் செயல்படுவதற்குக்கூட நிதியில்லாமல் தடுமாறும் அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு கை கொடுக்க வேண்டியதும் அரசுகளின் கடமை என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது .
இவ்வாறு அதில் வலியுறுத்தி உள்ளார்.
மற்றொரு டிவிட்டில்.  எல்லாரும் கவனமா இருங்க. வெள்ளம், புயல்னா இந்நேரம் வேட்டியை மடிச்சுக் கட்டி நானே இறங்கி யிருப்பேன். ஆனா, இது வேற மாதிரி தொற்று நோய். அதனால பொதுமக்கள் நன்மை கருதி ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கிறேன். முதல்ல உங்க குடும்பத்தை கவனிங்க, அப்புறம் அக்கம்பக்கத்துல கஷ்டப்படுறவங்களுக்கு உதவி பண்ணுங்க. ஒவ்வொருத்தரும் இன்னொருத்தருக்கு உதவி பண்ணனும்குறதுல உறுதியா இருங்க என்று பதிவிட்டு உள்ளார்.