சென்னை:  தமிழ்நாட்டில், வீடு, கடை உள்பட சாதாரண ஒப்பந்தங்களுக்கு ரூ.20 முத்திரை தாளில் ஒப்பந்தங்கள் போடப்பட்டு வந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு,  இனிமேல்  குறைந்த பட்ச முத்திரை தாள்  ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பழைய ரூ.20 முத்திரைத்தாள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே உள்ள ரூ.20 முத்திரைதாள்கள் முடிவடைந்ததும், புதிய நடைமுறை தானாகவே அமலுக்கு வந்து விடும்.

குறைந்தபட்சமாக  வீடு, கடை வாடகை. வாகன ஒப்பந்தம்  உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்கள் பதிய ரூ. 200 முத்திரைத் தாள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பதிவுத்துறை  வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இனி சாதாரண ஒப்பந்தங்களுக்கு 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக 200 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அதேபோல, பத்திர பதிவு ஒப்பந்தங்களை பதிவு செய்யாமல் வைத்திருந்தாலும் 20 ரூபாய் பத்திரங்களுக்கு பதில் 200 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விலைவாசி உயர்வு, வீட்டு வரி, மின்கட்டண உயர்வு என மக்கள் வரிச்சுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள முத்திரைத்தாள் உயர்வு நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டில் உள்ள மக்களை அதிகம் பாதிக்கும்.

பொதுவாக, தமிழ்நாட்டில், சொத்துக்களை வாங்கும்போது அதன் மதிப்பில், 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது.. இந்த மதிப்பு அடிப்படையில், முத்திரை தாள்களை பயன்படுத்த வேண்டும் அல்லது இ – ஸ்டாம்பிங் முறையில் உரிய தொகையை செலுத்த வேண்டும்.

ஆனால் சாமானிய மக்கள்  வீட்டு வாடகை, கடை வாடகை உள்பட சாதாரண ஒப்பந்தங்களுக்கு ரூ.20  முத்திரை தாளையே பயன்படுத்தி வருகின்றனர். உதாரணமாக, வீட்டை வாடகைக்கு விடுவோர், 11 மாதம் என்ற காலவரையறையில் ஒப்பந்தம் மேற்கொள்கிறார்கள்.. ஆண்டுதோறும் இந்த ஒப்பந்தங்களை புதுப்பித்து கொள்ளும்போது, 20 ரூபாய் முத்திரைத் தாளை பயன்படுத்தியே எழுதுகிறார்கள்.

இதை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இனிமேல் ரூ.200 முத்திரை தாளில்தான் ஒப்பந்தங்கள் போடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பான சட்ட திருத்தம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டள்ளது. அதன்படி,  முன்னதாக 20 ரூபாய் செலுத்தி வந்த முத்திரைத்தாள் கட்டணம் தற்போது 200 ரூபாயாகவும், 100 ரூபாயாக இருந்த முத்திரைத்தாள் கட்டணம் தற்போது 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் சங்க விதிகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.