ஸ்ரீநகர்
பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடைய 3 தீவிரவாதிகல் பற்றி தகவலளித்தால் ரூ. 20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று பொறுப்பேற்றது.
எனவே இந்தியா கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ தாக்குதல் தொடங்கி பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களை குறிவைத்து தாக்கி பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் அவற்றை இந்திய ராணுவத்தினர் வழியிலேயே முறியடித்தனர்.
இந்த மோதல், சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தியதால் மோதலை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை நடத்துமாறு பல நாடுகளும் கேட்டுக்கொண்டன. இந்தியாவின் அதிரடியை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் பின்வாங்கி, சமரசத்துக்கு வந்தது. இதையொட்டி இருநாடுகளுக்கு இடையே நடந்து வந்த சண்டை கடந்த 10-ந்தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது.
தற்போது, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை போலீசார் ஒட்டியுள்ளனர். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.,