சென்னை,
தமிழகத்தில் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 3வது நாளாக திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3-வது நாளாக தொடரும் தியேட்டர்கள் ஸ்ட்ரைகை தொடர்ந்து, செய்தித்தாள்களில் வெளி யிடப்பட்டு வந்த சினிமா சம்பந்தப்பட்ட விளம்பரங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி இழப்பு எற்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறி உள்ளார்.
நாடு முழுவதும் இந்த மாதம் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தமிழக அரசும் கேளிக்கை வரியாக 30 சதவிகிதம் உயர்த்தி உள்ளது.
ஏற்கனவே சிறுதொழில் நிறுவனங்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் போன்றோர் ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து உள்ளனர்.
சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள இரட்டை வரி முறையை உடனே ரத்து செய்யக்கோரி திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே வரி குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் பேச்சு வார்த்த நடத்தியும், முடிவு எட்டாத நிலையில் இன்று 3வது நாளாக நீடிக்கிறது. இதனால் மால்கள் மற்றும் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படு கின்றன. வேலை நிறுத்தம் காரணமாக திரையரங்குகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக செய்தித்தாள்களில் சினிமா விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
திரையரங்குகளில் ஓடும் படங்கள் மற்றும் திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்த எந்த விளம்பரங்களும் செய்தித்தாள்களில் இடம் பெறவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும், நல்ல முடிவு எட்டப்பட்டால், நாளை திரையரங்குகள் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளார்.