சென்னை: தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், 112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்புக்கான ஆணையினை வழங்கினார்.

சென்னை, கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் 21.01.2026 அன்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி.செழியன்  112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்புக்கான ஆணையினை வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் உலகத்தரத்தில் உயர்கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு ‘நான்முதல்வன்’, ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப்புதல்வன்’ எனப் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதனால் இன்று இந்தியாவிலேயே உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இக்கல்வி ஆண்டின் (2025-2026), மாணவர் சேர்க்கையில், புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுய நிதிக் கல்லூரி என அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பயிலும் 10 இலட்சம் மாணவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பத்திற்கேற்ப மடிக்கணினி (Laptop) வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, போதையில்லாத் தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் அனைத்துக் கல்லூரிகளிலும் போதை விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

பாலினச் சமத்துவத்தைப் பேணும் வகையில் கல்லூரிகள் தோறும் உளவியல் விழிப்புணர்வுக் குழுக்களும் அமைக்கப்பட்டு மாணவர்களிடையே உரிய புரிதலுணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல், அனைத்துக் கல்லூரிகளிலும் முன்னாள் மாணாக்கர்கள் சங்கம் உருவாக்கிட அறிவுறுத்தியத்திற்கிணங்கத் தற்போது அனைத்து அரசு கல்லூரிகளிலும் ‘முன்னாள் மாணாக்கர்கள் சங்கம்’ உருவாக்கப்பட்டுக் கல்லூரிகளுக்குத் தேவையான கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டது. அதன்படி, இன்று 112 அரசு கல்லூரிகளுக்கான நிதி ஒப்பளிப்பு ஆணையினை உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

[youtube-feed feed=1]