டெல்லி: கடன் மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று, இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜரானார் .
ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் அனில் அம்பானி இன்று அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

பிரபல தொழிலதிபரான, அனில் அம்பானி குழுமத்தின் பல நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், பண மோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய 35 வளாகங்கள், 50 நிறுவனங்கள், 25 தனிநபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது.
கடன்பெற்று திரும்ப செலுத்தாததால், மோசடியாளர் என அனில் அம்பானியையும், மோசடி கடன் என ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளித்த கடனையும் அடையாளப்படுத்தி, பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருந்த நிலையில், தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தியதாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணைக்கு ஆகஸ்ட் 5ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவர் வெளிநாடு தப்பி சென்றுவிடாதபடி, விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டத.
இதையடுத்து இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தொழிலதிபர் அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் நிறுவனத்தின் மீதான மோசடி புகார்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அனில் அம்பானியிடம் வாக்குமூலம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.