சென்னை: தமிழ்நாட்டில், பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ. 17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டிருக்கும் அரசாணையில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சாலை வசதி, குடிநீர்வசதி, தடுப்பணை கட்டுதல், பள்ளிகள் பராமரிப்பு, மேம்படுத்துதல் போன்ற உட்கட்டமைப்பு பணிகள் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என சட்டப் பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதனை செயல்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி அத்திப்பாடி கிராமப்பகுதியில் சாலைக்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கு ரூ.360 லட்சமும், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், நாயக்கனேரி மலை பழங்குடியினர் பகுதியில் தடுப்பணை கட்ட ரூ.4.95 லட்சமும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு சாலை பணிக்கு ரூ.557.25 லட்சம், திருச்சி மாவட்டம், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.48.40 லட்சமும், நாமக்கல், திருவண்ணாமலை, கோயம்பத்தூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிக்கு கட்டிட பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.268.30 லட்சம் என மொத்தம் 17 கோடியே 18 லட்சத்து மூன்றாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.