167 கோடி ரூபாய் மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் (ஜூன் 29) சென்னை விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் சோதனை நடத்திய மத்திய அரசின் சுங்கத் துறை அதிகாரிகள் அந்த கடையின் பணியாளர் ஒருவர் உடலில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ தங்க பேஸ்ட்டை கைப்பற்றினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் யூடியூபரும் அந்தக் கடையின் உரிமையாளருமான சபீர் அலிக்கு தங்கக் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக மேலும் இரண்டு கடைகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் 9 பேரை கைது செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர்நது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில், விமான நிலையத்தில் கடை வைப்பதற்கு தமிழக பாஜகவில் மாணவரணி முக்கிய நிர்வாகியாக உள்ள பிரித்வீ என்பவர் மூலம் விமான நிலைய இணை பொது மேலாளர் செல்வநாயகம் சிபாரிசின் பெயரில் அனுமதி வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், யூடியூபர் சபீர் அலியிடம் நடத்திய விசாரணையில் விமான நிலையத்தில் கடை வைக்க இலங்கையைச் சேர்ந்த தங்கக் கடத்தல் கும்பல் 77 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை கொடுத்து உதவியது தெரியவந்துள்ளது.

தவிர, இதுவரை இந்த கும்பல் 167 கோடி ரூபாய் மதிப்பள்ள 267 கிலோ தங்கத்தைக் கடத்தியது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமன்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பினாமி என்று தன்னைக் கூறிக்கொண்டு பிரித்வீ-க்கு விமான நிலையத்தில் கடை வைத்துள்ள இவர்கள் மாதா மாதம் கப்பம் கட்டியதும் சுங்க அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதுதொடர்பாக பாஜக மாணவரணி நிர்வாகி பிரித்வீ வீட்டில் சோதனை நடத்தி அவரிடம் விசாரணை நடத்தச் சென்ற அதிகாரிகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம் இதற்குமுன் உதவியாளராக பணியாற்றி வந்த பிரித்வீ-க்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அண்ணாமலைக்கும் அவருடைய வார்ரூம் ஆட்களுக்கும் தங்கக்கடத்தல் மற்றும் மணல்கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதாகவும் ஜூன் 15-ம் தேதி அன்றே இதைப்பற்றி பாஜக மேலி டத்தில் புகார் அளிக்க உள்ளதாக பாஜக சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஜூன் 19ம் அன்று கல்யாணராமன் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தங்க கடத்தல் வழக்கில் சுங்கத் துறை விசாரணையில் பாஜக மாணவரணி நிர்வாகி பிரித்வீ சிக்கியுள்ளதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடமும் விசாரணை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.