சென்னை: தமிழ்நாட்டில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை ( மார்ச் 23ந்தேதி வரை) ரூ.151.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறி உள்ளார்.
தமிழக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க, குறுகலான வீதிகளில் ‘ட்ரோன்’ மூலம் கண்காணிக்கத் தேர்தல் பார்வையாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 15ந்தேதி மாலை வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி, அன்றுமுதல் 23ந்தேதி பிற்பகல் வரை தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ரூ.151.93 கோடி மதிப்புள்ள ரொக்க பணம் மற்றும் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சனா, தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் வாக்காளர்களின் வசதியை உறுதி செய்யவும், மேம்பட்ட வாக்குப்பதிவு அனுபவத்தை வழங்கவும் இந்திய தேர்தல் ஆணையம் பல முன்முயற்சிகளை எடுத்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டை மேலும் எளிதாக்கும் வகையில், அதில் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பாகம் எண் ஆகியவை தெளிவாக தெரியும் வண்ணம் தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியை கண்டறிவதும், இதர விவரங்களை தெரிந்துகொள்வதும் எளிதாகும்.
வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களின் வசதிக்காக, வாக்குச்சாவடிகளில் கைப்பேசிகளை ஒப்படைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியின் நுழைவாயில் அருகே மிகவும் எளிமையான ‘புறா கூண்டு போன்ற’ பெட்டி அல்லது சணல் பைகள் அமைக்கப்படும். அங்கு வாக்காளர்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துச் செல்லலாம்.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற ‘இசிஐநெட்’(ECINet) என்ற ஒருங்கிணைந்த ஒற்றை இணையதளத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதில் ஆணையத்தின் 40க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் இணையதளங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வது, வாக்குப்பதிவு சதவீத விவரங்களை பார்த்தல், வாக்குச்சாவடி விவரங்களை அறிதல் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான உதவிகளைப் பெறுதல், தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவைகள் ஆகும். ‘இசிஐநெட்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் இதர தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்காணித்து தடுக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்க குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன. ரூ.30.53 கோடி ரொக்கம், ரூ.0.72 கோடி மதுபானம், ரூ.6.47 கோடி போதைப்பொருட்கள், ரூ.92.02 கோடி தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள், ரூ.22.19 கோடி இதர பொருட்கள், இலவசங்கள் என மொத்தம் ரூ.151.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறுகூறினார்.
