நாட்டில் வேலை இல்லா இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு மாதம் 1500 ரூபாய் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் அளிக்கப்பட இருக்கும் இந்தத் தொகையால் மத்திய அரசுக்கு வருடம் 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்தியநிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ வேலை கிடைக்காத இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும் தேசிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் மாதம் ரூ.1500 தொகை அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. வளர்ந்த நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இது நடைமுறையில் இருக்கிறது. அதே போன்ற திட்டத்தை இங்கும் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தினால் வருடத்துக்கு ரூ. 3 லட்சம் கோடியை கூடுதலாக செலவாகும். , அடுத்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வரியையும் மத்திய அரசு, கொண்டு வர இருக்கிறது ஆகவே இந்தத் திட்டத்துக்கான நிதியை திரட்டுவதில் சிரமம் இருக்காது” என்று தெரிவித்தார்.