சென்னை: ராணிப்பேட்டையில் ரூ.1500 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி மூலம்  அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு  செப்டம்பர் 28-ந்தேதி அடிக்கல் நாட்டினார். அதன்படி,  ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது. கார் உற்பத்தி ஆலையின் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது  ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் அமையும் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாடினார்.

பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி ஆலை  மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் மற்றும் காலணி உற்பத்தி சிறந்து விளங்குகிறது. அதை சர்வதேச தரத்தில் உயர்த்தி அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்த மெகா காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.