டெல்லி:
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மத்தியஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கொரோனா பாதிப்பை தொடர்ந்து அவசர கால பணிகளுக்காகவும், நாட்டில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும். இதில் ரூ.7,774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தொகை அடுத்த 4 ஆண்டுகளில் பல கட்டங்களாக சுகாதார திட்டப்பணிகளுக்கு செலவிடப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் தொகை கொரோனா நோய்த் தொற்றை கண்டறிதல், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், ஆய்வுக்கூடங்கள் அமைப்பது, பாதுகாப்பு உபகரணங்கள், வென்டி லேட்டர்கள், என்–95 முககவசம், மருந்துகள் வாங்குவது, தேசிய மற்றும் மாநில அளவில் சுகாதார திட்டங்களை வலுப்படுத்துதல் போன்றவற்றுக்காக செலவிடப்படும்.
இதில் முதல் கட்டமாக மத்திய சுகாதார அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கென்று தனி மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்களை அமைப்பதற்காகவும், ஏற்கனவே உள்ள சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக ரூ.3,000 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா தொற்று பரிசோதனைக்காக 13 லட்சம் கருவிகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து சமூக சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு பிரதம மந்திரியின் ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.