சீனாவில் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்ட JWR குழுமத்தின் டிஜிட்டல் தங்க வர்த்தக தளம் திடீரென மூடப்பட்டதால், 1,000 கோடி யுவானுக்கு (சுமார் ரூ. 13000 கோடி) மேல் முதலீட்டாளர் பணம் முடங்கியுள்ளது.
இந்த சம்பவம், சீனாவின் நிதி கண்காணிப்பு முறைகளில் உள்ள குறைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

JWR நிறுவனம் தன்னை ஒரு தொழில்நுட்ப இடைநிலையாளர் (Tech intermediary) என கூறிக்கொண்டாலும், உண்மையில் ப்ரோக்கர் போலவே செயல்பட்டுள்ளது.
சில்லறை முதலீட்டாளர்களிடமிருந்து முன்பணம் பெற்று, டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கியது.
ஆனால், உரிய லைசென்ஸ், மூலதன காப்பு, கையிருப்பு எதுவும் அந்நிறுவனத்திடம் இல்லை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது..
2026 ஜனவரியில் தங்கம் விலை திடீரென உயர்ந்ததும், ஒரே நேரத்தில் முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தை விற்று பணமாக எடுக்க முயன்றனர். அப்போது தான் JWR நிறுவனத்தில் பணமே இல்லாமல் என்று தெரியவந்துள்ளது.
வங்கியாகவோ, சரக்கு (commodities) வர்த்தகராகவோ அல்லது ஷாங்காய் கோல்ட் எக்சேஞ்ச் கட்டுப்பாட்டிலோ இல்லாத JWR நிறுவனம் சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தியது, முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று தன்னிச்சையாகப் பயன்படுத்தி வந்துள்ளது.
இதனால், நிதி நெருக்கடி மற்றும் கடன் அபாயம் மிக அதிகமாக உருவானது. இது ஒரு வகை நிழல் வங்கி (Shadow Banking) அமைப்பு என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது மற்றும் மொபைல் ஆப் மூலம் எளிதான முதலீடு போன்ற காரணங்களால் ஈர்க்கப்பட்டு, மக்கள் அதிகமாக முதலீடு செய்தனர்.
சமூக வலைதளங்களில் பணம் கிடைக்கவில்லை என்ற தகவல் பரவியதும், வங்கி ஓட்டம் (Bank Run) போல நிலைமை மாறியது. ஷென்செனில் உள்ள JWR அலுவலகம் முன்பு போராட்டங்களும் நடைபெற்றன.
பின்னர், காவல்துறையினர் தலையிட்டு போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுபோன்ற போலி தங்க முதலீட்டு மோசடிகள் சீனாவில் இதற்கு முன்பும் நடந்துள்ளது, ஷென்செனின் ஷுய்பெய் (Shuibei) போன்ற தங்க வர்த்தக மையங்களில் ஏற்படும் பாதிப்பு, உள்நாட்டு பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடும் என்பதால் இதுகுறித்த முழுமையான விசாரணை நடத்தி பணத்தை மீட்க சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
[youtube-feed feed=1]