சென்னை: திமுக அமைச்சர் கேஎன்.நேரு மீதான ரூ. 1020 கோடி ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் 1020 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அதிமுக எம்.பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதுபோன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை பணியிடங்களை நிரப்புவதில், 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு மனுக்களும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் ஜனவரி 28 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் டிஜிபி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த சூழலில் ஆதிநாராயணன் வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, அரசு வழக்கறிஞர், அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தை அரசுக்கு டிஜிபி அனுப்பி வைத்தார். இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அனுமதி வழங்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. விசாரணையை முடிக்க 180 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்த விவகாரத்தில் நேரடியாக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இல்லை’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அட்வகேட் ஜெனரல் பி.எஸ் ராமன் ஆஜராகி, ‘மனுதாரர் ஆதிநாராயணன் மீது ஆறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 25 வழக்குகள் உள்ளன’ என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். மேலும் அவர், “மனுதாரர்களில் இன்னொருவர் அரசியல்வாதி என்று தெரிவித்த போது,
குறுக்கிட்டு பேசிய தலைமை நீதிபதி, ‘அரசியல்வாதிகள் வழக்கு தொடரக்கூடாதா? மக்கள் பிரதிநிதிகள் கூட பொதுநல வழக்குகள் தொடர்ந்திருக்கிறார்கள்’ என்ற சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், ‘டிஜிபிக்கு தகவல் மட்டும் அனுப்பி வைக்கவில்லை. ஆதாரங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. எனவே ஆரம்பகட்ட விசாரணை இல்லாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது’ என்றார்.
தமிழக டிஜிபி சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் கபூர் சவுத்ரி ஆஜராகி, ‘ இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அடிப்படை உரிமை இல்லை. இருவரின் நன்பகத்தன்மையை ஆராய வேண்டும். எந்த வழக்கின் சோதனையில் ஆதாரங்கள் கிடைத்ததாக அமலாக்கத்துறை கூறுகிறதோ, அந்த வழக்கு ரத்து செய்யப் பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசு டிஜிபி லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.
மேலும் அரசின் பதிலுக்கு பதில் அளிக்கும்படி ஆதிநாராயணன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இரு வழக்கு விசாரணையையும் பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதைடுத்து வழக்கு நேற்று (பிப்ரவரி 4ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர்பி.எஸ்.ராமன் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார்.
மனுதாரர் ஆதிநாராயணன் மீது 2013 முதல் பதிவுசெய்யப்பட்ட 32 வழக்குகளில் 18 வழக்குகள் முடிந்துவிட்டன. 2 கொலை, ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. (இதற்கு விளக்கம் அளித்து ஆதிநாராயணன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.)
இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி, மனுதாரர் தொடர்ந்துள்ள இந்த வழக்கின் உண்மைத் தன்மை குறித்த சந்தேகம் எழுகிறது என்றார்.
இதையடுத்து, இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி: இந்த முறைகேடு குறித்து ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதன் அடிப்படையில் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியலாம் என்றார்.
இதையடுத்து அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான என்.ரமேஷ், இந்த விவகாரத்தில், பெரும் தொகை லஞ்சமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆதாரங்களை காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்புவது சட்டப்பூர்வக் கடமை, அதன்படியே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
பின்னர் பேசிய தலைமை நீதிபதி, இந்த வழக்கில், ஆரம்பகட்ட விசாரணை நடத்தாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்தால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதை காரணம் காட்டி வழக்கை ரத்து செய்யக் கோரலாம் என்றார்.
இதைத்தொடர்ந்து, ஆஜரான லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அதிகாரப்பூர்வமற்ற ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அமலாக்கத் துறை கடிதத்தின்படி விசாரணை தொடங்கியுள்ளது என்றார்.
பின்னர் பேசிய அரசு வழக்கறிஞர் ராமன், ஆரம்பகட்ட விசாரணையை முடிக்கலஞ்ச ஒழிப்புத் துறைக்கு 120நாட்கள் அவகாசம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து பேசிய டிஜிபி தரப்பு வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, வழக்கு தொடர மனுதாரர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று கூறினார்.
இவ்வாறு காரசாரமாக வாதம் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின்தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[youtube-feed feed=1]