சென்னை; குடிநீர் வாரியத்தில் ரூ.1020 கோடி ஊழல் என அமலாக்கத்துறை டிஜிபிக்கு 2வது கடிதம் எழுதி உள்ள நிலையில், இதற்கு  அமைச்சர் நேரு விளக்கம் அளித்துள்ளார். திமுக அரசின்  ”சாதனை பார்த்து வெதும்புவர்களுக்கு பதில் சொல்ல முடியாது..  தன்மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன்” என தெரிவித்து உள்ளார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக உள்ள நேரு மீது அமலாக்கத்துறை 2வது ஊழல் புகாரை தெரிவித்துள்ளது. ஏற்கனவே அரசு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய நிலையில், தற்போது,   குடிநீர் வாரிய டெண்டர் மூலம் ”ரூ.1020 கோடி ஊழல் புகார்” என குறிப்பிட்டு, இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை உடடினயாக எஃப்ஐஆர் போட வேண்டும் என கூறி உள்ளது.

இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  பாஜக மாநில முன்னாள் தலைவர்  அண்ணாமலை போன்றோர்,  திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தால் தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம் என்று கூறி உள்ளனர்.

”சாதனை பார்த்து வெதும்புவர்களுக்கு பதில் சொல்ல முடியாது.. சட்டப்படி எதிர்கொள்வேன்” 

இந்த நிலையில், அமைச்சர் நேரு, தன்மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறி உள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கே.என். நேரு அறிக்கையில் ‘, ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத்துறையையும் சேர்ந்து கொண்டு அதை ஒன்றிய பாஜக அரசின் ஏவல் துறையாக்கி நாளொரு புகாரும், பொழுதொரு பிரச்சாரமுமாக என்னைக் குறி வைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. கடந்த ஐந்து வருடங்களில் எனது துறையின் கீழ் 24 ஆயிரத்து 752 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன.

கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 77லட்சத்து 28ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப் பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என இதுவரை 1762 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது சென்னை என்றால் தொல்காப்பிய பூங்கா, கோவை என்றால் செம்மொழிப் பூங்கா என்பதோடு மக்கள் கண்டுகளிக்க தங்களது பொழுது போக்கிற்கா ஏற்ற பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள பாஜக ஆளும் அரசுகளும் செய்யவில்லை. அதனால்தான் எனது துறையின் திராவிட மாடல் வளர்ச்சி எதிர்கட்சிகளின் கண்ணை உறுத்துவதை விட அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது.

பேருந்து நிலையங்கள் என்று எடுத்துக்கொண்டால் இதுவரை 158பேருந்து நிலையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடப் பயணத்திற்கு மட்டுமல்ல- அத்தியாவசியப் போக்குவரத்து தேவைக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் எனது துறை வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளைச் செய்திருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றும் அளவிற்கு வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம்.

சென்னையில் அதிமுக ஆட்சியில் சாலைகளும்- சப்வேக்களும் ஒரு மழைக்கே வெள்ளக்காடாக காட்சியளித்ததை அனைவரும் அறிவர். இன்று சென்னையில் உள்ள சப்வேக்களில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்கிறோம். செம்பரம்பாக்கம் என்றாலே அதிமுக ஆட்சிதான் நினைவுக்கு வரும்.

அந்த நிலையை மாற்றி எத்தகையை மழை வெள்ளத்திலும் எத்தனை முறை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்தாலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து இன்னலின்றி மழை வெள்ளத் துயரங்களில் இருந்து சென்னை மக்களை காப்பாற்றியிருக்கிறோம். அந்த வகையில் சென்னை மாநகாராட்சியில் மட்டும் 1519 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் கால்வாய் பணிகளை செய்துள்ள அரசு இந்த திராவிட மாடல் அரசு மட்டும் தான்.

இந்த சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக-பாஜக கூட்டணி கட்சியினரின் தூக்கத்தை இந்த அரசின் சாதனைகள் கலைத்து விட்டன. குறிப்பாக பாஜகவினரை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுகிறது. ஒன்றிய நிதியை முடக்குகிறோம். ஆளுநரை வைத்து முட்டுக்கட்டை போடுகிறோம். ஏஜென்ஸிகளை விட்டு பிரச்சாரம் செய்கிறோம். ஆனாலும் சாதனைகள் செய்கிறார்களே என்ற எரிச்சல்.

எனவே எதை தின்றால் பித்தம் தெளியும் என திண்டாடுகிறார்கள். ஆகவே அமலாக்கத்துறை போன்ற ஏஜென்ஸிகளை ஏவி விடுகிறார்கள். ஒன்றிய பாஜக அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை அமலாக்கத்துறையையே வைத்து செய்கிறார்கள். தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை இன்று பாஜகவின் துணை அமைப்பாக்கப்பட்டிருக்கிறது.

என் சகோதரர் மீது 2013 ல் வாங்கிய கடனை வைத்து போடப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் “எந்த குற்றமும் நடக்கவில்லை” என ரத்து செய்து விட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்து விட்டது. ஆனாலும் அமலாக்கத்துறையை மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி ஒன்றிய பாஜக அரசு நிர்பந்திக்கிறது என்றால் அவர்களுக்குப் பயம் நானல்ல. இந்த துறை செய்துள்ள சாதனைகள்.

எனது துறைக்குள் எங்கு நுழைந்து பார்த்தாலும் எங்கும் “சாதனை- சாதனை- சாதனை” என்று தான் எதிரொலிக்கும். ஆனால் அதுவே ஒன்றிய பாஜக அரசு தூண்டிவிடும் அமலாக்கத்துறையின் கண்களுக்கு ஆதாரமற்ற புகார்களாகத் தெரிகிறது. அப்பட்டமான அரசியல் செய்யத் தூண்டி விடப்படுகிறது. மக்கள் போற்றும் எனது துறையின் சாதனைகளை பார்த்து வெதும்புவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நான் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

எனது நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்குதல் நிர்வாகத்துறையைப் பொறுத்தமட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குதல், மழை நீர் வடிகால் பணிகளை நிறைவேற்றுதல், தலை சிறந்த பூங்காக்களை அமைத்தல் ஆகியவையே முதன்மையான பணிகள். முழுமையான சாதனைகள். மற்றபடி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பணியாற்ற வந்துள்ள நாங்கள் ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதலில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ அல்லது “அதிமுக- பாஜக” கூட்டணியினர் “பொய்யையும், புரட்டையும்” மட்டுமே மூலதனமாக வைத்து ஈடுபடும் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நேரு மீது ரூ.1020 கோடி ஊழல் புகார்

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலைவாய்ப்பு மோசடி நடைபெற்றுள்ளதாக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி அன்று மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை தலைவருக்கு 232 பக்க விரிவான அறிக்கையுடன் அமலாக்கத்துறை கடிதம் ஒன்று எழுதியது.

இந்த நிலையில் 36 நாட்களுக்கு பிறகு அமலாக்கத்துறை தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் மீண்டும் கடிதம் எழுதியிருக்கிறது. அதில் 258 பக்கம் கொண்ட ஆவணங்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த கடிதத்தில், ”நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையில் டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளது. அதில் 1020 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. ஒப்பந்த பணிகளுக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் பெறப்பட்டுள்ளது. கட்சி நிதியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது” என்று அமலாக்கத்துறை தமிழக டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், ”நகராட்சி நிர்வாக துறையில் கழிவறை கட்டுவது, தூய்மை பணியாளர்களுக்கான வீடு ஒதுக்குவது, நபார்டு திட்டம், போன்ற பல்வேறு திட்டங்களில் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இதற்கான ஆதரங்கள் உள்ளன. ஒப்பந்தங்கள் இறுதி செய்வதில் 20 முதல் 25 சதவீதம் வரை லஞ்சம் கைமாறி உள்ளது” என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கடிதத்தை மையப்படுத்தி தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சமூக வலைதளங்களில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான கருத்து பதிவு செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், , ”நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்கத்துறை தமிழக பொறுப்பு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் கே.என்.நேரு, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது. கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இதெல்லாம் “Tip of the Iceberg” தான் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது.

வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் “கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்” தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன். ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம். ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம். பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம். அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்.

இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்? காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன. அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுகவின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி. உண்மையிலேயே ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா?” எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


அண்ணாமலை

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறுகையில், ”திமுக ஆட்சியின் ஊழல் இனி குற்றச்சாட்டுக்குரிய விஷயமாக இல்லாமல் அது இப்போது தமிழ்நாடு இனி புறக்கணிக்க முடியாத ஒன்றாக நிற்கிறது.

அமைச்சர் கே.என்.நேருவின் கீழ் நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த ₹888 கோடி வேலைக்கான பண மோசடியில் தொடங்கிய விஷயம், இப்போது மற்றொரு அதிர்ச்சியூட்டும் ₹1020 கோடி ஊழலாக மாறியுள்ளது, இதுகுறித்து அமலாக்க இயக்குநரகம் 252 பக்க அறிக்கையை டிஜிபியிடம் சமர்ப்பித்துள்ளது.

நிர்வாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தனது உறவினர்கள் மூலம் துறை ஒப்பந்தங்களில் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது, இது மிகப்பெரிய கொள்ளைக்கு சமம். வாட்ஸ்அப் அரட்டைகள், லஞ்ச கணக்கீட்டுத் தாள்கள் மற்றும் ஹவாலா மூலம் செய்யப்பட்ட பணமோசடி பற்றிய விவரங்களை அமலாக்க இயக்குநரகம் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்த திமுக அரசாங்கத்தின் கீழ் திறமையாகச் செயல்பட்ட ஒரே துறை “வசூல், கமிஷன் மற்றும் ஊழல் துறை” மட்டுமே. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாமதப்படுத்துவதை நிறுத்திவிட்டு, வேலைக்கான பண மோசடி மற்றும் ஒப்பந்தங்களுக்கான லஞ்ச ஊழல் குறித்து உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நேரு துறையில் மேலும் ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை எழுதிய ரகசிய கடிதம் வெளியான விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை! தமிழ்நாடு அரசு

அமைச்சர் நேருவின் ரூ.888 கோடி ஊழல்: விசாரணைக்கு அஞ்சி திமுக அரசு தப்பி ஓடுவது ஏன்? அன்புமணி கேள்வி