சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற  கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம்  வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியின் இளையமகன் டாக்டர் அசோக் சிகாமணி அறிவித்து உள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ரூபா, கடந்த 2021 செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின் தலைவர் பதவி நிரப்பப்படாமலே இருந்தது. இதையடுத்து, துணைத்தலைவராக இருந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் மருத்துவர் அசோக் சிகாமணி கிரிக்கெட் அசோசியேசனை நடததி வந்தார்.  இந்த நிலையில், இன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல்  நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியில் அசோக் சிகாமணி களமிறங்கினார். அவரை எதிர்த்து பிரபு என்பவர் களமிறங்கினார். ஆனால், அவரும் கடைசியில் வாபஸ் பெற்றார். இதனால், தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிட யாரும் முன்வராத நிலையில், அசோக் சிகாமணி போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வாகியுள்ளார். அதுபோல, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக ஆர்ஐ பழனி, பொருளாளராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய தலைவராக பொறுப்பேற்ற சிகாமணி, பின்னர் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ஓய்வுபெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்ததுடன், ரஞ்சி கிரிக்கெட் கோப்பையை வெல்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், களிர் கிரிக்கெட்டை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவர இருப்பதாக கூறியவர், பள்ளி, கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் கூறினார்.