சென்னை: தகுதியான குடும்பங்களை கண்டறிந்து ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் முதல் காகிதமில்லா பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில், 2021-22ம் ஆண்டு கால மீதமுள்ள 6 மாதங்களுக்கான பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட, திமுகவின் தேர்தல் அறிக்கையான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி வழங்கும் திட்டம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”குடும்பத்தலைவர் என்பது பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவித்தொகை என்பது தவறான புரிதல். உதவித்தொகை இல்லத்தரசிகளுக்கானது என்பதால் குடும்பத்தலைவர் பெயரை ரேசன்கார்டுகளில்  மாற்றத் தேவையில்லை.. இல்லத்தரசிகளுக்கு உதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.