சென்னை: தமிழ்நாடு அரசு உரிமைத்தொகை கோரி, மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 1.48 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதை வரும் 15ந்தேதி (ஜுலை) முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அத்துடன் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
ஜூலை 15ந்தேதி கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள் அன்று திருவள்ளூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
2021 சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. வெற்றி பெற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தலைவிகள், மாணவ மாணவிகள் வரை பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், நான் முதல்வன், மக்களுடன் முதல்வர், நமக்கு நாமே, மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் உள்பட ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அமல்படுத்தி, அது முறையாக செயல்படுகிறதா என கண்காணித்து வருகிறார். இந்த திட்டங்களில் முத்தாய்ப்பாக இருப்பது மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்துக்கு மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப் பித்து இருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் விரிவாக்கத்தின்படி, 1.48 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் பணியை வரும் 15ந்தேதி முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
அதுபோல, அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் 2023 ஆகஸ்டில் துவங்கப்பட்டது. இதன் 2ம் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதனையடுத்து 2-ம் கட்டமாக கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் மேலும் 7.35 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் 1 கோடி யே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1000 சென்றடைகிறது.
இதுதவிர, நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், புதிதாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மேலும் 11.85 லட்சம் பெண்கள் ரூ.1000 கேட்டு மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்தனர். அவர்கள் பார்க்கும் வேலை, வருமானம், வசதி எந்த அளவுக்கு என்பது பற்றியும் விசாரித்தனர். இதன் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்த பட்டியல்படி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப் படும் என்று கேள்விகள் எழுந்தன.
இதனையடுத்து இது தொடர்பான முக்கிய அறிவிப்பை விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். அப்போது, மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான வர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வங்கிக் கணக்கில் இந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும் என்று கூறினார்.
அதுபோல, தமிழகத்தில் மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை கிடைக்கும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதியும் கூறியிருந்தார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் , “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் கலைஞர் நூற்றாண்டில் முதலமைச்சரால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 1 கோடியே 16 இலட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் என்று, ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை, இந்த 10 மாதங்களில், தலா 10ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 11 ஆயிரத்து 323 கோடி ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் உரிமைத் தொகை கோரி, மேல்முறையீடு செய்யப்பட்டவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. யாரை ஏமாற்றுவதற்காக சாத்தியமேயில்லாத அறிவிப்புகள்? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாள்களுக்குள் இ-சேவை மூலமாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம்” என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வரும் 15ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் சென்று அரசு உதவிபெறும் பள்ளி களிலும் மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன், மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் தொடங்கி வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று திருவள்ளூர் சென்று விரிவான ஆலோசனையும் நடத்தினார்கள்.