சென்னை: தமிழகஅரசு ஏழை மாணவிகள் உயர்கல்வி படிக்க மாதம் தோறும் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ.1000 வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து, அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பிப்ரவரி மாத மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு என்று இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை அரசு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி உறுதிப்பட தெரிவித்திருந்தார்.
இதன்பின் உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 பெறுவதற்குத் தகுதியான மாணவிகளிடருந்து சான்றிதழ்களை பெற அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பட்டயம் மற்றும் ஐ.டி.ஐ. படிப்புகளில் சேரும் பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்ட உதவி நிதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. மேலும், மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ.1000 வழங்கவும் முடிவு செய்துள்ளது.