சென்னை: மாணவர்களுக்கு  மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதன்மூலம்  அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து, மாநிலம் முழுவதும் மொத்தம் உள்ள 3.28 லட்சம் மாணவர்கள் இதனால் பயனடைய உள்ளனர்.

கோவையில் நடைபெற்ற  அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மாணவர்களுக்கு  மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினார்.

முன்னதாக  இன்று காலை விமானம் மூலம் கோவைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.  பின்னர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுதமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. முன்னதாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வர பயின்று, உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை, கடந்த 2022ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கினார். அந்த திட்டம் தற்போது மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம், 3.68 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும், அதற்காக 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்று வருகிறார்கள்.. கடந்த நிதியாண்டில் மட்டும் 2,09,365 மாணவியர்களும், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்களும் பயனடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கல்லூரிகளில் சேர்ந்துள்ள 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்காக 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது.

தமிழ்ப்புதல்வன் திட்டத்திற்க , ஆதார் அட்டை, ஆதார் அட்டை இணைக்கப்பட்ட ஜாயிண்ட் வங்கி கணக்கு, அரசு பள்ளியில் படிப்பதற்கான ஆவணங்கள் இருந்தாலே போதும்.. அதேபோல, தமிழகத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவராகவும், பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசு அங்கீகரித்ததாகவும் இருத்தல் வேண்டும்.. பிற மாநிலங்களில் IIT, NIT, IISER போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.