சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு பிறகு ரூ. 1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக, அந்த துறையின் அமைச்சரான செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனையில் ரூ. 1000 கோடி முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. பல தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்புடையதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இது சம்பந்தமான விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மதுபான சப்ளை டிஸ்டில்லரி நிறுவனங்களான எஸ்என்ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள் தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர், ஏஆர் ஹோல்டிங் போன்ற பாட்டில் நிறுவனங்களின் அதிகாரிகளும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் அதிமுக, இந்நாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே பணமோசடி வழக்கில் ஒராண்டு சிறையில் இருந்து, அதனால் பதவி பறிபோன நிலையில், ஜாமின் கிடைத்ததும் மீண்டும் அமைச்சராக பதவியில் உள்ளது. அவரது ஜாமின் எப்போது ரத்து செய்யப்படுமோ என்ற எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், தற்போது செந்தில் பாலாஜியின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கான ஊழல் வெளியாகி உள்ளது.
அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில், டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை மேற்கொண்டது. இதில், சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடந்தது. அப்போது ஏராளமான ஆவனங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இது தமிழ்நாட்டில் அதிர்வலைகளை எற்படுத்தியது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட சோதனை குறித்து தற்போது அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மதுபான கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. சோதனையில் கணக்கில் வராத ரூ. 1,000 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பார் உரிம டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. டாஸ்மாக் அதிகாரிகளின் உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுபான ஆலைகள் – டாஸ்மாக் அதிகாரிகள் இடையே நேரடி தொடர்பு இருந்துள்ளது. டிஸ்டில்லரிகள் மற்றும் பாட்டிலிங் நிறுவன சோதனையில் நிதி மோசடி தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, “டாஸ்மாக் அலுவலகங்களில் நடந்த சோதனையின் போது, டிரான்ஸ்பர் போஸ்டிங்ஸ், போக்குவரத்து டெண்டர், பார் உரிம டெண்டர், சில டிஸ்டில்லரி நிறுவனங்களுக் குச் சாதகமாக இன்டென்ட் ஆர்டர்களில் முறைகேடு நடந்த ஆவணங்கள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்களால் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் ரூ30 அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. டிஸ்டில்லரி நிறுவனங்களான எஸ்என்ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள் தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர், ஏஆர் ஹோல்டிங் போன்ற பாட்டில் நிறுவனங்களுடன் பெரிய அளவில் பண மோசடி நடந்துள்ளது.
இதன் மூலம், சட்ட விரோத பணப் பறிமாற்றம் அம்பலமாகியுள்ளதோடு கணக்கில் காட்டாத ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததுள்ளது கண்டறியப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, துறையின் முக்கிய அதிகாரிகள் மட்டுமின்றி, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்துவரும் நிறுவனங்களும் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் விரைவில் சில அதிரடி கைதுகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே தமிழக எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல, டாஸ்மாக் மற்றும் ரேசன் பொருட்கள் ஊழல்களை மக்களிடம் இருந்து மறைக்கும் வகையில், திமுக அரசு தினசரி ஒரு பிரச்சினைகளை உருவாக்கி, மக்கள் மனதில் ஆட்சியின் ஊழல் தெரியாவாறு மடை மாற்றி வருவதாக கூறப்படும் நிலையில், அமலாக்கத்துறையின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி அரசு, தெலுங்கானா அரசு, சத்திஸ்கர் அரசுகள் மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் வெளியாகி உள்ள டாஸ்மாக் மதுபான ஊழல் திமுக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.