சென்னை: திமுக அரசின் டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழலுக்கு எதிரான பாஜக போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கீழ் செயல்பட்டு வரும் துறையான டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்தன. இதுதொடர்பான புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர், தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட டாஸ்மாக் மதுபான சப்ளை டிஸ்டில்லரி நிறுவனங்களான எஸ்என்ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள் தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர், ஏஆர் ஹோல்டிங் போன்ற பாட்டில் நிறுவனங்களிலும் 3 நாட்கள் தொடர் சோதனை நடத்தியது. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த சோதனையில் ரூ. 1000 கோடி முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, திமுக அரசின் டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழலுக்கு எதிராக இன்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் கலந்துகொள்ள பாஜக தலைவர்கள் எழும்பூர் நோக்கி வரத்தொடங்கினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் முக்கிய தலைவர்கள் வீட்டை விட்டு வெளியறே முடியாதவாறு, அவர்களின் வீடுகளுக்குள்ளேய முடக்கப்பட்டு, வெளியே காவல்துறையினர் காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே போராட்டத்துக்குபுறப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விருகம்பாக்கத்தில் இருந்து புறப்பப்பட்ட போது கைது செய்யப்பட்ட்டார். அதுபோல வினோஜ் பி செல்வம் , கரு.நாகராஜனை உள்பட மூத்த பாஜக தலைவர் களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாஜகவினரை கைது செய்த போலீசார், இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காரில் புறப்பட்டு வந்தார். அவரது கார் கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சந்திப்பு அருகே வந்தபோது, அதை தடுத்து நிறுத்திய போலீசார் அண்ணா மலையை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, டாஸ்மாக் ஊழல் குறித்து, இனி தேதி அறிவிக்காமல் எந்த நேரத்திலும் போராட்டம் நடத்துவோம் என கூறியதுடன், ஆட்சியாளர்களுக்கு பயம் இருப்பதால் கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் முற்றுகையிடுவோம் என்று கூறியதுடன், டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது என்று குற்றம்சாட்டியதுடன், டெல்லியை விட மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது ஒரு அமைச்சருக்கு மட்டும் முதலமைச்சர் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என கேள்வி எழுப்பினார்.
கைது செய்யப்பட்ட பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பா.ஜ.க போராட்டத்தை முடக்கும் வகையில், காவல்துறையினர் பாஜக முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் சிறை வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும், போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். பா.ஜ.க.வினர் வராமல் தடுப்பதற்காக அந்த பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அந்த பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் நடைபெற்றது. . அதேபோல் ராஜரத்தினம் மைதானத்துக்கு வரும் பின்னி சாலை சந்திப்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
அந்த வகையில் சென்னை எழும்பூரிலிருந்து பேரணியாகச் செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை காவல்துறை யினர் கைது செய்தனர். இதையடுத்து அவரை பேருந்தில் ஏற்ற முயன்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தேசிய கட்சியின் மூத்த தலைவரான தம்மை நாய் வண்டியில் ஏற்றுவதாகவும் ஆதங்கம் தெரிவித்தார்.
இதேபோன்று, சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து எழும்பூர் புறப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், அவரை தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறை தங்க வைத்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க குவிந்த பாஜக தொண்டர்களை காவல்துறை கைது செய்தனர். மேலும், அவர்களை வாகனங்களை அழைத்துச் சென்றதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
பாஜக போராட்டத்தை தொடர்ந்து, எழும்பூர் அருங்காட்சியகம் பகுதியில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வரும் சாலை, புதுப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் வழியாக ராஜரத்தினம் மைதானத்துக்கு வரும் சாலை ஆகிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
தடையை மீறி போராட்டம் நடத்த வரும் பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்து கொண்டு செல்வதற்காக ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இன்று காலை 9.45 மணி வரை பா.ஜ.க. தொண்டர்கள் யாரையும் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வர போலீசார் அனுமதிக்கவில்லை. வரும் வழியிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் காலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.
இதேபோல் சென்னை முழுவதும் ஆங்காங்கே பா.ஜ.க.வினர் தடுத்தி நிறுத்தி கைது செய்யப்பட்டனர். சென்னை தரமணியில் ஒன்று கூடி போராட்டம் நடத்த புறப்பட்ட பா.ஜ.க.வினர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.
சாலிகிராமத்திலும் பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.