சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளதால், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது தமிழக அரசு.
அடித்தட்டு மக்களின் வணிகம் மற்றும் வேலை உள்ளிட்ட அனைத்தும் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள்.
இதனையடுத்து தமிழக முதல்வர் பழனிச்சாமி சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 பணத்துடன், அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
இந்தப் பணி ஏப்ரல் 2ம் தேதி துவங்கி, ஏப்ரல் 15ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கான முகமூடி, கடைகளுக்கான கிருமி நாசினி ஆகியவற்றை அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.