சென்னை: அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்,.
கோவையில் நாளை (9.8.2024) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனால் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் இளைய சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தால் 3 இலட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்றுள்ளனர். அதேபோல, பள்ளிக் கல்விமுடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த திட்டம் நாளை கோவையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7,72,000 மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கிறார்கள்.
இவர்களில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிக அதிகமாகும். உயர்கல்வி சேர்க்கையில் இந்தியா முதலிடம் என்னும் மிகப் பெரிய சாதனையைத் தமிழ்நாடு படைத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,, “கல்வி வெள்ளத்தால் அழியாது; நெருப்பிலும் வேகாது, வேந்தராலும் பறித்திட முடியாது; பிறருக்குக் கொடுத்தாலும் நிறையுமே தவிர, குறைவுபடாது. கள்வரால் திருடவும் முடியாது” என்று கல்வியின் பெருமையைக் கூறுவார்கள்.
கல்வியே உயர்ந்த செல்வம். இந்தக் கல்விச் செல்வத்தை ஏழை, பணக்காரர், சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை வளர்க்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக, 6ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை சென்னை அரசு பாரதியார் மகளிர் கல்லூரியில் 5.9.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிடக் கடந்த ஆண்டில் கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் நிதியாண்டில் 2,09,365 மாணவியர்கள் பயனடைந்து வந்த நிலையில், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர் என்பதே இத்திட்டத்தின் வெற்றிக்கு அடையாளமாகும். புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 3,28,280 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், 2022-2023-ஆம் நிதியாண்டில் ரூ.100.11 கோடியும், 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.271.66 கோடியும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000/- ரூபாய் வீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. புதுமைப் பெண் திட்டத்திற்கென 2024-2025-ஆம் நிதியாண்டிற்கு ரூ.370.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2024 முதல் ஜுலை-2024 வரை ரூ.95.61 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சிறப்பு வாய்ந்த திட்டமானது 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, “அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்” என இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நாளை (9.8.2024 அன்று) கோவை மாநகரில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்கள். இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 இலட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000/- பெற்றுப் பயன் அடைவார்கள். இந்த மகத்தான திட்டத்திற்காக மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது. பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பிற்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது.
கல்லூரி செல்லும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை வளர்க்கிறது, கற்கும் ஆர்வத்தைப் பெருக்குகிறது. பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கிறது. குடும்பங்களின் வளத்தை மேம்படுத்துகிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை இந்திய அளவில் மேலும் உயர்த்துகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகழை மேலும் மேலும் உயர்த்துகிறது தமிழ்ப் புதல்வன் திட்டம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.