கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த 22 ஏக்கர் நிலம் சுமார் ரூ.100 கோடி மதிப்புடையது. இந்த புகாரின் மீது கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர்.
இதேபோல், கரூர் மாவட்ட வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ‘தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் எனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் எனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்குகளை கரூர் காவல்துறையிடம் இருந்து, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கரூர் நகர போலீசார் வழக்கு தொடர்பான கோப்புகள், திரட்டிய தகவல்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் விஜயபாஸ்கர் கைது செய்யப்ட வாய்ப்பு இருப்பதால், முன்ஜான் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடியான நிலையில், அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடி வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை முதல், விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் உள்பட பல இடங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நில மோசடி வழக்கில் தொடர்புடைய யுவராஜ், செல்வராஜ் உள்பட 4 பேர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீடு, தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த யுவராஜ், ரகு, செல்வராஜ், மாரப்பன் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடைக்கால முன்ஜாமின் வழக்கில் இன்று தீர்ப்பு வரும் நிலையில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.