டில்லி
இந்திய ரயில்வே 35 பைசாவில் ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஒடிசாவில் நடந்த மிக பெரிய ரயில் விபத்தை அடுத்து, ரயிலில் பயணிப்பவர்கள் காப்பீடு எடுத்துக் கொள்வதன் அவசியம் குறித்த எண்ணம் அதிகரித்துள்ளது. பலர் அறியாத விவரம் என்னவென்றால் இந்திய ரயில்வேயின், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் அல்லது அதன் செயலியில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, வெறும் 35 பைசாவுக்குப் பயண காப்பீடு செய்து, விபத்து நேரிடும்பட்சத்தில், 10 லட்ச ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்பதே ஆகும்.
விபத்தின் காரணமாக ஏற்படும் மரணம், நிரந்தர முழு ஊனம் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, 10 லட்ச ரூபாய் வரை பயணிகளுக்குக் காப்பீட்டுத் தொகையை ஐ ஆர் சி டி சி வழங்குகிறது. இதன் மூலம் ஒரு பயணி ரயில் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர உடல் ஊனம் அடைந்தாலோ, 10 லட்ச ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
மேலும் நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டால், இழப்பீடாக 7.5 லட்ச ரூபாயும், காயம் ஏற்பட்டால் மருத்துவமனை சிகிச்சைக்காக 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும். விபத்தில் பயணி இறந்தால் அவருக்கான காப்பீட்டுத் தொகையுடன், அவரது உடலை எடுத்துச் செல்ல 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
தங்கள் இ-டிக்கெட்டை இணையதள விண்ணப்ப த்தின் வாயிலாக முன்பதிவு செய்யும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே இது பொருந்தும், எனவே வெளிநாட்டுக் குடிமக்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள். விருப்பத்தின் அடிப்படையில், முன்பதிவு செய்யும் போது, இருக்கை உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள், ஆர்.ஏ.சி., டிக்கெட்டுகள், பகுதி இருக்கை உறுதிப் படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இந்த இழப்பீடு குறித்து, பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் வாயிலாக பாலிசி தகவல்கள் உள்ளிட்டவை தெரிவிக்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்தபின், அந்தந்த காப்பீட்டு நிறுவனத் தளத்தில் வாரிசு குறித்த விபரங்கள் நிரப்பப்பட வேண்டும். வாரிசு விபரங்கள் தெரிவிக்கப்படாத நிலையில், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.