லஞ்ச புகார் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கையில், வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றும் ஐஆர்எஸ் அதிகாரியான அமித் குமார் சிங்கால் மற்றும் அவரது கூட்டாளியான ஹர்ஷ் கோட்டக்குடன் ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள சிங்கலின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் தோராயமாக ரூ.1 கோடி ரொக்கம், 3.5 கிலோ தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் திங்களன்று உறுதிப்படுத்தினர்.

சண்டிகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லா பினோஸ் பீட்சா (La Pino’s Pizza) நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனத்திற்கு எதிராக வருமான வரித்துறை வழங்கிய நோட்டீஸ் குறித்த சிக்கலைத் தீர்க்க IRS அதிகாரி அமித் குமார் சிங்கால் ரூ. 45 லட்சம் லஞ்சம் கேட்டதாக அந்நிறுவன உரிமையாளர் சனம் கபூர் சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பான நடவடிக்கையில் 2007-ம் ஆண்டு பேட்ச் IRS அதிகாரி அமித் குமார் சிங்கால் மற்றும் அவரது கூட்டாளி ஹர்ஷ் கோட்டக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக அரசு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவதால் தற்போது அரசு அதிகாரிகளுக்கு எது விதியென்றே புரியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதைப் பயன்படுத்திக் கொண்டு தேன் எடுத்தவன் புறங்கையை நக்கியது போல் சில அதிகாரிகள் இந்த தளர்வுகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அந்தவகையில், இதற்கு முன் மும்பை சுங்கத் துறையில் இணை ஆணையராக இருந்த அமித் குமார் சிங்கால் தனது பதவியைப் பயன்படுத்தி சனம் கபூரின் பீட்சா நிறுவனத்துடன் வணிக தொடர்புகளை ஏற்படுத்தினார்.

இதில் சிங்கால் அவரது தாயாரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட பார்க்கர் இம்பெக்ஸ் என்ற நிறுவனம் மூலம் ஒரு உரிம ஒப்பந்தம் தவிர அவரது கூட்டாளியான ஹர்ஷ் கோட்டக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கூடுதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், கபூருடன் ஏற்பட்ட வணிகத் தகராறை அடுத்து தனக்கு வழங்கப்பட்ட விற்பனை நிலையங்களை கபூரிடமே அதிக விலைக்கு வாங்க அழுத்தம் கொடுத்து திரும்ப விற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிப்ரவரி 2025 இல் கபூருக்கு எதிரான வருமான வரி நோட்டீசில் சிங்காலின் தலையீடு இருப்பதும் அதனால் கணிசமான அபராதம் விதிக்கப்படலாம் என்று கபூரின் ஆடிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் உள்ள சிங்கலின் அலுவலகத்திற்குக் கடந்த ஏப்ரல் மாதம் சென்ற கபூரிடம் ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் இல்லையென்றால் சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கபூரின் விரிவான புகாரின் பேரில், மே 30 அன்று இருவருக்கும் இடையேயான நான்கு மணி நேர ரகசிய விவாதப் பதிவு உட்பட, கூற்றுக்களை சிபிஐ சரிபார்த்தது. அடுத்த நாள், மொஹாலியில் தனது நடவடிக்கையை மேற்கொண்ட சிபிஐ அங்கு சிங்கலின் சார்பாக கோடக் லஞ்சத்தின் முதல் தவணையை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து டெல்லியின் வசந்த் குஞ்சில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சிங்கால் கைது செய்யப்பட்டார். கபூரின் வழக்கறிஞர் ககன்தீப் ஜம்முவின் கூற்றுப்படி, இருவரும் ஜூன் 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.