புதுடெல்லி: இந்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து, ரூ.1.7 லட்சம் கோடி அளவிற்கான தொகை, கணக்கில் வராமல் போயிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் உறுப்பினர் ரதின் ராய்தான், இந்த மாபெரும் பிரச்சினையை முதன்முதலில் கண்டறிந்தது.

பொருளாதார சர்வே மற்றும் பட்ஜெட் ஆகிய இரண்டையும் ஆய்வுசெய்த அவர், 2018-19 நிதியாண்டில் அரசு ஈட்டிய வருவாய், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதைவிட, பொருளாதார சர்வேயில் குறைவாக இருந்துள்ளது. அந்த சதவிகிதப் புள்ளியானது ரூ.1.7 லட்சம் கோடி என்ற அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது. அதாவது, வருவாயில் பற்றாக்குறையாக உள்ளது.

பட்ஜெட் என்பது திருத்தப்பட்ட மதிப்பீடுகளை(Revised estimates) பயன்படுத்துகிறது. ஆனால், பொருளாதார சர்வே என்பது இடைக்கால இருப்பை(Provisional actuals) பயன்படுத்துகிறது. இதுவே, அரசாங்க கணக்கு வழக்கின் மிகத் துல்லியமான மதிப்பீடாக கருதப்படுகிறது.

பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, 2018-19 நிதியாண்டிற்கான அரசின் வருவாயை ரூ.17.3 லட்சம் கோடி என்பதாக காட்டுகிறது. ஆனால், பொருளாதார சர்வே மதிப்பீட்டின்படி, அரசின் வருமானம் ரூ.15.6 லட்சம் கோடி மட்டுமே என்பதாக தெரியவருகிறது. இதன்படி, ரூ.1.7 லட்சம் கோடி பற்றாக்குறை நிலவுகிறது.

ஆனால், இந்தப் பெரிய சிக்கல் தொடர்பாக நிதியமைச்சகத்திற்கு கேள்விகள் அனுப்பி வைக்கப்பட்டும், பதில் கிடைக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

[youtube-feed feed=1]