ரவுண்ட்ஸ்பாய்: பாகுபலி 2 – படத்துக்காக, நடிகர் சத்யாராஜ் வெளியிட்ட அறிக்கை நெகிழ வைத்துவிட்டதே!
ராமண்ணா: பல வருடங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி எனக்கு நினைவுக்கு வருகிறது.
“ஈழப் பிரச்சினையில், மனசுல அவ்வளவு ஆதங்கம், கோபம், சோகம் இருக்கு. அதை எல்லாத்தையும் மேடையில் கொட்டித் தீர்த்தால், கண்டிப்பா எனக்கு ஜெயில்தான்.
அப்படி நான் ஜெயில், கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன்னா, தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவாங்க. அதான் மனசுல இருக்கிறதைக் கொட்டித் தீர்க்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல்!” – மார்க்கெட் இருந்தபோது நடிகர் சத்யராஜ் சொன்னது.
அதனால்தான், தொழிலுக்கு பாதிப்பு இல்லாத கர்நாடகாவை விமர்சித்தார். பின்னாட்களில் தான் பாகுபலி படத்தில் நடிக்கப்போவதும், அது கர்நாடகாவிலும் ரிலீஸ் ஆகும் என்பதும் தெரிந்திருந்தால் அப்படி பேசியிருக்கமாட்டார்.
அதுமட்டுமல்ல.. முன்பு குசேலன் படத்துக்காக ரஜினி.மன்னிப்பு கேட்டபோது “
ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்படுத்தி விட்டார்.
என்னைப் பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக்கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன்..”.என்று இதே சத்தியராஜ் சொன்னார்.
இன்னொரு விசயம்..
“பத்தினி, வேசி… இரண்டு சொற்களுமே பெண்களைக் கொச்சைப்படுத்துபவை” என்றார் பெரியரார்.
பெரியாரின் பெருந்தொண்டன் என்று சொல்லிக்கொள்ளும் சத்யராஜ், ஒரு கூட்டத்தில் குறிப்பிட்ட நபரின் பெரைச் சொல்லி, “அவர் ஒரு வேசி மகன்” இதை ஒப்புக்கொள்பவர்கள் கை தூக்குங்கள் என்றார்.
“பெரியாரிஸ்ட்” என்பது மரியாதைக்குரிய சொல்.. வாழ்க்கை முறை.
ஆனால் இதையும்கூட அரிதாரமாகவே பூசியிருக்கிறார் சத்தியராஜ்.
தற்போது பாகுபலி 2 படத்துக்காக “கன்னட மக்களைப் பற்றிப் பேசியதற்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். அதோடு “நடிகன் என்பதைவிட தமிழன் என்பதையே விரும்புகிறேன். இதனால் என்னை வைத்து படம் எடுப்பவர்கள் பிரச்சினை ஏற்படும் என்றால் இனி வருங்காலத்தில் என்னைத் தேடி வராதீர்கள்” என்கிறார்.
ஆனால் அப்படியெல்லாம் வராமல் இருக்க மாட்டார்கள். மறுபடி பிரச்சினை என்றால் மறுபடி இப்படி ஏதாவது பேசி சத்தியராஜ் சமாளிப்பார் என்பது திரையுலகினருக்குத் தெரியும்.
ஆம்..அவர் சிறந்த நடிகர்.
இவரைத்தான் அப்பாவிகள், “தன்மானத்தமிழன்” என்கிறார்கள்.
ரவுண்ட்ஸ்பாய்: வைகை அணியில் தெர்மாகோல் அட்டைகளைப் போட்டு நீர் ஆவியாவதை தடுக்க முயற்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூவை ஆளாளுக்கு கிண்டலடிக்கிறார்களே..!
ராமண்ணா: கிண்டலடிப்பது சரிதானே. நீரின் மேற்பரப்பில் பிளாஸ்டிக் கோலிகுண்டுகளை போடும் முறை வெளிநாடுகிளில் இருக்கிறது… குஜராத்தில் நீர் நிலைகளின் மேல் பலமான தடுப்புகளை அமைத்து சூரிய மின்சக்தி தயாரிக்கும் ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள் என்று பத்திரிகை டாட் காம் இதழிலேயே செய்தி வந்திருக்கிறதே.
தவிர இன்னொரு விசயம்.. தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், ஒருமுறை, “தமிழகம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகளின் மேல் கொட்டகை போட்டு தண்ணீர் ஆவியாவதைத் தடுக்கும் யோசனையில் இருக்கிறேன்” என்று சட்டமன்றத்திலேயே கூறினார்.
ரவுண்ட்ஸ்பாய்: இவ்வளவு எளிதாக தினகரன் ஒதுங்கிக்கொள்வார் என்று நினைத்தீர்களா?
ராமண்ணா: கேள்வியே தப்பு. உண்மையிலேயே ஒதுங்குகிறவர் என்றால், தனது துணைப்பொதுச்செயலாளர் பதவியைவிட்டு விலகியிருக்க வேண்டும். அவரோ “பொதுச்செயலாளர் சசிகலாவை கேட்டு முடிவு செய்வேன்” என்கிறார்.
அதாவது ஆர்.கே. நகர் மக்களுக்கு தொப்பி போட்ட அவர், இப்போது அதிமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தொப்பி போட முனைகிறார்.
ரவுண்ட்ஸ்பாய்: தீபாவளிக்கு வெளியாக இருந்த ரஜினியின் 2.0 திரைப்படம் 2018 ஜனவரிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறதே..
ராமண்ணா: ரசிகர்களை சந்திப்பதாக அறிவித்த ரஜினி, அதை ஒத்திவைத்தபோதே மறைமுகமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.
ரவுண்ட்ஸ்பாய்: தமிழகத்தில், அனல் வெயிலில் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அரசு எடுத்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்துள்ளாரே..
ராமண்ணா: ஆம். ஏப்., 21 முதல், அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறை. சிறப்பு வகுப்புகளுக்குத் தடை. உயர் கல்வி நிறுவனங்களில், தேர்வு எழுதும் மாணவர்கள், வெப்ப அலையால் பாதிக்கப்படாமல் இருக்க, சிறப்பு பேருந்து வசதி. வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தேவையான மருந்து பொருட்களை, தயார் நிலை. கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் மருந்துகள், தயார் நிலை. * கட்டுமான பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய அறிவுரைகள் மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கை. பொது மக்கள் கூடும் இடங்களில், நிழல் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல்..
எல்லாம் ஓகேதான். அதே நேரம் இந்த வேகாத வெயிலில் பொருத்தமே இல்லாத முரட்டு சட்டை பேண்ட், முழுதுமாய் கால்களை மூடிய ஷூ என அலையும் காவல்துறையினரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
குளிர் தேசத்தில் வெள்ளையன் அணிந்த உடை மற்றும் இத்தியாதிகளை வெப்பமண்டல நாடான இந்தியாவிலும் கட்டாயப்படுத்த வேண்டுமா.
போலீசாருக்கான உடையை மாற்ற வேண்டும். காற்று புகுவது போன்ற அமைப்பில் உள்ள செருப்புகளை அளிக்க வேண்டும்.