சென்னை: ரூட்டு தல பிரச்சினையில்,  மாநில கல்லூரி மாணவன் சுந்தர் என்பரை அடித்துக் கொன்ற வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை சென்னை உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட்டு தல பிரச்சினை காரணமாக அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, இது ரவுடிகளின் மோதல் போல ஆயுதங்களுடன் நடைபெற்று வருகிறது. இதை இருப்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டிய காவல்துறை, மாணவர்களின் எதிர்காலம் கருதி, அவர்களை எச்சரித்து வருகிறது.

இதன் தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற இரு கல்லுரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, மாநில கல்லூரி மாணவர் சுந்தர் என்பவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடித்துக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணியைச் சேர்ந்த மாணவர் சுந்தர் கடந்த 4-ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கியதில் மாணவர் சுந்தர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மாணவர்கள் 4 பேர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி வழக்கு தொடரப்பட்டது. கடந்த விசாரணையின்போது, உயர்நிதிமன்றம்  சென்னையில் உள்ள மாணவர்கள் மீதான வழக்கு விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி காவல்துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. அதில், கடந்த 10 ஆண்டுகளில் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாணவர்களின் ஜாமின் வழக்கு இன்று மீணடும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,   பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 மாணவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் காலை 10 முதல் 2 வரை பணியாற்றவும், மற்ற 2 மாணவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூட்டு தல பிரச்சினை: சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள்மீது 231 வழக்குகள் பதிவு