சென்னை: ரூட்டு தல பிரச்சினை மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மோதல் காரணமாக, சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள்மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரம் , அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைள் என்ன என்பது குறித்த விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.
இதைத்தொடர்ந்து,சென்னையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை, உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களிடையே ரூட்டுதல பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் என்பவர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால், கடுமையாக தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த மாணவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், அம்மாணவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி மாணவர் உயிரிழந்தார்.
இதன்தொடர்ச்சியாக, சுந்தரை தாக்கிய மாணவர்கள்மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இது சம்பந்தமா 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனட்ர.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு மாணவர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த விசாரணையின்போது, காவல்துறையினரை கடுமையாக சாடிய நீதிபதி, மாணவர்கள்மீது கடந்த 10ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் நேற்று (நவம்பர் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் மீது அடிதடி உள்ளிட்ட மோதல் வழக்குகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
அதன்படி, 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன. இவற்றில் 33 வழக்குகளை ரயில்வே போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், உயர் கல்வித்துறை செயலாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மோதல் சம்பவங்களை தடுக்க மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதை பதிவு செய்த நீதிபதி, ஜாமின் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மாணவர்கள் மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரூட்டு தல பிரச்சினை: மாணவர்களிடையே மோதலைத் தடுக்க சென்னை காவல்துறை புது வியூகம்!